மதுரை: பழிக்கு பழி வாங்குவதாக எண்ணி, அப்பாவி இளைஞரின் தலையைத் துண்டித்து படுகொலை செய்த நான்கு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் வி.கே.குருசாமி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மண்டல தலைவர் மறைந்த ராஜபாண்டி ஆகியோரின் குடும்பத்தினரிடையே முன்பகை காரணமாக, இதுவரையில் 15க்கும் மேற்பட்ட பழிக்குபழியாக படுகொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இவ்வேளையில், கொலையில் சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும் அடுத்தடுத்த நபர்கள் கொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் வரிசையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது குருசாமியின் உறவினர் எம்.எஸ்.பாண்டியன் என்பவரை ராஜபாண்டியின் உறவினர்கள் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.
இதற்கு பழிவாங்கும் நோக்கத்திலும், தங்களின் எதிரிகளுக்கு அச்சம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் நேற்று (நவ. 15) மாலை திமுக பிரமுகர் குருசாமியின் தரப்பைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் கொலை வெறியாட்டம் ஆட, ராஜபாண்டி தரப்பு நபர்களான கீழ் மதுரை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், முனியசாமி ஆகிய இருவரையும் கீழவெளி வீதி பகுதியில் நடந்து செல்லும்போது கொலை செய்ய துரத்தியுள்ளனர்.
ஆனால், அவர்களிடம் இருந்து இருவரும் தப்பித்து ஓடியுள்ளனர். அவர்களுடன் வந்த சம்பந்தமே இல்லாத மற்றொருவரான உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (24) என்ற இளைஞர் இந்த கும்பலின் கையில் சிக்கவே, ஆத்திரத்தில் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் சராமாரியாக வெட்டி படுகொலை செய்து, தலையைத் துண்டித்து வீசிச் சென்றனர். கொலை செய்யப்பட்ட முருகானந்தம், காவல் துறை தேர்வுக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை சம்பவம் போக்குவரத்து சமிஞ்சை தூணின் அருகே நடைபெற்றதால், கொலைக்கான காணொலி ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கின. இருவேறு நபர்களின் பழிக்கு பழி பசிக்கு, கடந்த 10ஆண்டுகளில் இதுவரை 15க்கும் மேற்பட்ட நபர்கள் இரையாக்கப்பட்டுள்ளனர். இப்படி நடைபெறும் சம்பவங்களின்போது, அப்பாவிகளும் படுகொலை செய்யப்படும் நிலை இருப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை, கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அதில், வி.கே.குருசாமியின் ஆதரவாளர்களான சின்ன அலெக்ஸ், அழகுராஜா, பழனிமுருகன் உள்ளிட்ட 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.