ஈரோடு: அரியப்பம்பாளையத்தில் நடந்த சாலை விபத்தில் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.
சேலத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் பண்ணாரி அம்மன் கோயில் செல்வதற்காக ஈரோடு - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள அரியப்பம்பாளையம் என்ற இடத்தில் இன்று (செப்டம்பர் 6) அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் முன்னால் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் சென்ற சேலத்தைச் சேர்ந்த குமார், காவேரி, ராமகிருஷ்ணன், வசந்தன், ரேவதி உள்பட ஒன்பது பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அவசர ஊர்தியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு விபத்து நடந்த இடத்தில் இருந்த கார் மீட்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.