தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோடு பகுதியில் உள்ள காளியப்பன் காம்பவுண்டில் வசித்து வருபவர் சேர்மசாமி. இவருக்கு பாலபுஷ்பம்(52) என்ற மனைவியும், ஆனந்தராஜ்(34) என்ற மகனும் உள்ளனர். திருமணமாகாமல் பெற்றோருடன் வசித்து வருகிற ஆனந்தராஜ் உடல்நலக்குறைவாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
இந்நிலையில், வீட்டில் பாலபுஷ்பம் மட்டும் இருந்துவந்த சூழலில் கடந்த மூன்று நாள்களாக வீடு மூடி கிடந்தே இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிழக்கு காவல் துறையினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பாலபுஷ்பம் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
பாலபுஷ்பத்தின் உடலை மீட்ட காவல்துறையினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பாலபுஷ்பத்தின் மகன் ஆனந்தராஜ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, உயிரிழந்த பாலபுஷ்பத்துடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பாலபுஷ்பம் கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.