கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி மாலை விற்பனையாளர்களை தாக்கி 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், குற்றவாளிகளை பிடிக்க கள்ளக்குறிச்சி உள்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் உள்ளிட்டவர்களை தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் தனிப்படை காவல் துறையினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் சாலையோரம் உள்ள கேமிராக்கள், சுங்கச்சாவடி கேமிராக்கள், கொள்ளை சம்பவங்கள் நடைபெறும் இடங்களுக்கு வந்து போன செல்போன் தொடர்பு உரையாடல்கள் உள்ளிட்டவற்றை வைத்து கண்காணித்து வந்தனர்.
இதன் அடிப்படையில் நேற்று (செப்.19) தனிப்படை காவல் துறையினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வி.கூட்டுரோடு என்ற பகுதியில் நின்று சோதனை செய்து கொண்டிருந்தபோது, விலை உயர்ந்த பல்சர் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அவர்களிடம் மேலும் விசாரித்ததில் அவர்கள் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
பிடிபட்ட அந்த இரண்டு இளைஞர்களும் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த நாகத்தி என்ற கிராமத்தை சேர்ந்த நதிசெல்வம் என்பவருடைய மகன்கள் பிரதீப், பிரசாந்த் என்பது தெரியவந்துள்ளது.
பிடிபட்ட கொள்ளையர்களிடம் இருந்து விலை உயர்ந்த பல்சர் பைக்,கத்தி, 6 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த இரண்டு கொள்ளையர்களின் பின்னணியில் ஒரு பெரிய கொள்ளைக் கும்பல் செயல்பட்டு வருவதும், இந்தக் கொள்ளைக் கும்பல் கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, நாமக்கல், கரூர், பெரம்பலூர், திருப்பூர், விழுப்புரம், உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டு பல லட்ச ரூபாயை கொள்ளையடித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடை கொள்ளை சம்பவங்களில் 11 வழக்குகள் பதியப்பட்டு அந்த வழக்கின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதி திருப்பந்துறை கிராம ராஜாக்கண்ணு, சதாம் உசேன், நரி என்கின்ற அரவிந்த், சம்பத், தஞ்சை மாவட்டம் கரந்தை கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் உள்ளிட்ட மேலும் பல கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.