திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஷராப் பஜார் மூங்கில்மண்டி வீதியைச் சேர்ந்தவர் திலீப்குமார் (51). இவர் பஜார் பகுதியில் நகைக் கடை ஒன்று நடத்திவரும் நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவருகிறார். இவருக்கு சொந்தமாக ஆம்பூர் அடுத்துள்ள காட்டுக் கொல்லை புதூர் என்ற இடத்தில் 1.5 ஏக்கரில் ரோஜா கார்டன் என்ற பெயரில் காலி வீட்டுமனை உள்ளது.
அதை விற்பனை செய்வதாக தரகர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று (நவ. 21) பிற்பகல் 3 மணியளவில் ரத்தினம் என்ற தரகர், திலீப்குமாரை தொடர்புகொண்டு நிலத்தை பார்ப்பதற்கு ஆள்கள் வந்துள்ளார்கள் உடனடியாக வரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து, திலீப்குமார் தனது காரில் ஓட்டுநர் சேகருடன் ரோஜா கார்டன் பகுதிக்குச் சென்றார்.
ரோஜா கார்டன் பகுதிக்கு வந்ததும் காரை விட்டு இறங்கிய திலிப்குமாரை, கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் காத்திருந்த மூன்று மர்ம நபர்கள் அவரை இழுத்துச் சென்று காரில் கடத்திச்சென்றனர்.
இதனை பார்த்த ஓட்டுநர் சேகர், தரகர் ரத்தினம் இருவரும் உடனடியாக திலீப்குமாரின் வீட்டுக்கு தகவல்தெரிவித்தனர். தகவலறிந்த திலீப் குமாரின் சகோதரர் மனோகர் லால் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் தன்னுடைய அண்ணன் திலீப்குமார் கடத்தப்பட்டதாக புகாரளித்தார். புகாரின்பேரில் ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையிலான காவல் துறையினர் கடத்தப்பட்ட பகுதியிலிருந்த வனப்பகுதிக்குள் முழுவதுமாக தற்போது தேடிவருகின்றனர்.
ஆம்பூரில் நகைக்கடை மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் திலிப்குமார் பணத்திற்காக கடத்தப்பட்டாரா? அல்லது ஏதேனும் பணம் கொடுத்தல் வாங்கல் பிரச்னையா? முன்விரோதம் காரணமா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுபான்மையின மக்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கே - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி