கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் டாஸ்மாக் கடைகள் உட்பட அனைத்து பார்களும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக கள்ளச்சாரயாம் காய்ச்சி விற்கத் தொடங்கிவிட்டனர். இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தோட்டத்துப் பகுதிகளில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தேனி மாவட்ட மதுவிலக்கு காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான எலுமிச்சை தோட்டத்தில் சாராயம் காய்ச்ச தயாராகிக் கொண்டிருந்த இருவரை சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தேவதானப்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி, செல்வம் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் அவர்களிடமிருந்து சாராயம் காய்ச்சுவதற்கு வைத்திருந்த பானை, ஊறல், யூரியா, வேலம்பட்டை, வெல்லம் உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேவதானப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க...5ஜி சோதனையை வெற்றிகரமாக நடத்திய ஓப்போ