சென்னை ஆதம்பாக்கம் மண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி(39). கூலி தொழில் செய்து வந்த இவருக்கு, மனைவி, மூன்று மகன்கள் உள்ளனர். மதுவுக்கு அடிமையானவர் என்பதால், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு தம்பதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோயம்பேட்டில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனிடையே, வீட்டுக்கு வருமாறு கடந்த ஒரு மாதமாக மனைவியிடம் வேளாங்கண்ணி முறையிட்டு வந்தார். ஆனால், அவர் வீட்டுக்கு வராததால் மன உளைச்சலுக்கு ஆளான வேளாங்கண்ணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் வந்த ஆதம்பாக்கம் காவல்துறையினர், வேளாங்கண்ணியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.