கரூரை அடுத்துள்ள விஸ்வநாதபுரி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் சிரஞ்சீவி (13) அப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தார்
2018 ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று, அண்ணாநகரைச் சேர்ந்த பிரதீப் (21) என்பவர் பள்ளியைவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவன் சிரஞ்சீவியிடம் அவருக்கு இனிப்புகள், மிட்டாய்கள் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைக்கூறி ஆள் அரவமற்ற முள் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அம்மாணவனை வலுக்கட்டாயமாக தன்பால் ஈர்ப்பில் ஈடுபடுத்தியுள்ளார். பின் அந்த மாணவனால் உண்மை வெளியாகிவிடும் என்ற அச்சத்தில் அவரை கொலைச்செய்துள்ளார்.
இரவு நேரமாகியும் பள்ளிச் சென்ற சிரஞ்சீவி வீடு திரும்பவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் அவனது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் சிரஞ்சீவி குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் முள் காட்டுக்குச் செல்லும் கால்வாயின் அருகில் மாணவனின் உடல் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாகக் காவல் துறையினர் விரைந்துசென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாயமான கார்த்தியின் பெற்றோரும் அங்கு வரவழைக்கப்பட்டபோது இறந்து கிடப்பது சிரஞ்சீவி என்பது தெரியவந்தது.
சிரஞ்சீவியின் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது குறித்து பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். இதனையடுத்து, சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞர் பிரதீப் விசாரணையில் நடந்தவற்றை தெரிவித்து குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையிலிருந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நேற்று நிறைவடைந்தது. பள்ளி மாணவனை பாலியல் வன்முறை, படுகொலைசெய்த குற்றங்களுக்காக பிரதீபுக்கு ஆயுள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பிரதீப் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க : காதல் திருமணம் செய்துகொண்ட மகள் மீது ஆசிட் வீச்சு; கர்ப்பிணி என்றும் பாராத கொடூரத் தந்தை