சமூக வலைதளங்கள் மூலமாகவும், ஓஎல்எக்ஸ் போன்ற விற்பனை தளங்கள் மூலமாகவும், இரண்டாம்தர விலைக்கு வீட்டு உபயோகப் பொருட்களை தேடுபவர்களை குறிவைத்து மோசடிகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ராணுவ வீரர்களின் புகைப்படத்தை பயன்படுத்தி, அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை என விளம்பரம் செய்து மோசடி செய்கின்றனர். சென்னையில் மட்டுமல்லாது இதுபோல் தமிழகம் முழுவதும் பலரையும் ஏமாற்றி வருகின்றனர்.
சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த நாகராஜ் என்ற தனியார் நிறுவன ஊழியர், இரு சக்கர வாகனம் விற்பனை என்ற ஃபேஸ்புக் விளம்பரம் ஒன்றை பார்த்து, அதில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தான் ஒரு ராணுவ வீரர் எனவும், பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் வசித்து வருவதாகவும் மறு இணைப்பில் இருந்தவர் தெரிவித்துள்ளார். பின்னர் இரு சக்கர வாகனத்தை 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக ராணுவ வீரரிடம் பேரம் பேசியுள்ளார் நாகராஜ். முதலில் 3,150 ரூபாய் கொரியர் செலவு முன்கூட்டியே அனுப்ப வேண்டும் எனவும் அதன் பின், இருசக்கர வாகனம் பார்சலில் வீடு வந்தவுடன் மீதி பணத்தை அனுப்புமாறும் ராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.
அதன் பின், இரு சக்கர வாகனத்தை பார்சல் செய்தது போன்றும், அதை வாகனத்தில் ஏற்றுவது போன்றும் போட்டோவை ராணுவ வீரர் அனுப்பியுள்ளார். அதையடுத்து இருசக்கர வாகனத்தில் பெயரை மாற்றித் தருவதாகவும், அதற்கு 9 ஆயிரம் செலவாகும் எனவும் ராணுவ வீரர் கூறியதை அடுத்து, அதற்கும் சேர்த்து பல காரணங்கள் கூறி 32 ஆயிரம் வரை கூகுள் பே மூலம் நாகராஜ் அனுப்பியுள்ளார். 30 நிமிடத்தில் வீட்டிற்கு வாகனம் வந்துவிடும் என தெரிவித்த நிலையிலும் வராததால், ராணுவ வீரரை தொடர்பு கொண்ட நாகராஜிடம், மேலும்10 ஆயிரம் செலுத்தினால் உடனடியாக வாகனத்தை பார்சலில் அனுப்பி விடுவதாக கூறியுள்ளார்.
சந்தேகப்பட்ட நாகராஜ், வாகனத்தை அனுப்பவில்லை என்றால் காவல் நிலையத்தில் புகாரளிப்பதாக எச்சரித்ததற்கு பின்னர், ராணுவ வீரரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. பின்னர் இது குறித்து அடையாறு காவல் நிலையத்தில் நாகராஜ் புகாரளித்துள்ளார். விசாரணையில் தான் ஏமாந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த நாகராஜ் ராணுவ வீரர் என்பதாலும், வீடியோ கால் மூலம் பேசியவுடன் முழுமையாக நம்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது போன்று சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. விசாரணை செய்ததில் பாதிக்கப்பட்டவர்களின் பணம் வடநாட்டில் போலி முகவரி உள்ள வங்கிக் கணக்கில் சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மோசடியாளர்கள் அடிக்கடி செல்ஃபோன் எண்களை மாற்றுவதால், அவர்களை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு சவாலாக இருந்து வருகிறது. ஆகவே, இந்த வடநாட்டு கொள்ளைக் கும்பலின் கைவரிசை தொடர்ந்து இருந்து வருகிறது.
இதையும் படிங்க: கூலித் தொழிலாளிகளை குறி வைத்து மோசடி செய்த கும்பல் கைது