சென்னை: குளத்துக்கு அடியில் இருந்த சேற்றில் சிக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அம்பத்தூர் அடுத்த முகப்பேர், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை (60). இவர், ரவி என்பவரது மாடுகளை பராமரித்து வந்த கூலித் தொழிலாளி ஆவார். இச்சூழலில், இன்று (டிச.12) ஏழுமலை மாடுகளை அழைத்து கொண்டு மேய்ச்சலுக்கு புறப்பட்டார்.
பின்னர், இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியிலுள்ள ஒரு குளத்தின் அருகில் மாடுகளை மேயவிட்டார். அப்போது, ஒரு மாடு குளத்துக்குள் இறங்கி தண்ணீர் குடிக்கச் சென்றது. பின்னர், அங்குள்ள சேற்றில் மாடு சிக்கி தண்ணீரில் மூழ்கியது.
இதனைகண்ட, ஏழுமலை ஓடிச்சென்று மாட்டை மீட்க முயற்சி செய்தார். அப்போது, அவரும் குளத்திலுள்ள சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதனைபார்த்த, பொதுமக்கள் அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர், அவர்கள் குளத்தில் கயிறு கட்டி இறங்கி ஏழுமலையின் உடலை மீட்டனர். தகவலறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.