சென்னை செயின் தாமஸ் மவுண்டில் முன்னாள் டிஜிபி ஜாங்கிட்டின் மகன் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 30ஆம் தேதி இவரது அலுவலகத்தின் ஷட்டர் உடைக்கப்பட்டு விலை உயர்ந்த லேப்டாப், பணம், செல்போன், வெளிநாட்டு ரூபாய்களை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடி சென்று விட்டதாக புனித தோமையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று திருமுல்லைவாயில் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருவர் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவலருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே ஷட்டரை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் பல முறை ஜெயிலுக்கு சென்ற முருகன் கடந்த 37 நாள்களுக்கு முன்பு கரோனா காரணமாக ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆனால் அடுத்த நாளே தனது கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளார்.
இவரது நண்பரான ஆகாஷ் என்பவருடன் இணைந்து இருசக்கர வாகனத்தை திருடுவதை கற்று கொண்டு திருமுல்லைவாயில், மடிப்பாக்கம், வியாசார்பாடி ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தை திருடி 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்று வந்துள்ளது தெரியவந்தது.
பின்னர் கடந்த 30ஆம் தேதி மடிப்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு அந்த வாகனத்திலேயே புனித தோமையார் பகுதியில் முன்னாள் டிஜிபி ஜாங்கிட்டின் மகன் அலுவலகத்தில் கொள்ளையடித்துவிட்டு சென்றது தெரியவந்தது.
மடிப்பாக்கம் பகுதிக்கு சென்றால் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என நினைத்து திருமுல்லைவாயில் பகுதியில் நண்பர் முருகன் வீட்டில் தங்கி வந்துள்ளார். அப்போது முருகன் தினமும் புதுபுது இருசக்கர வாகனத்தில் வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்தத் தகவலின் பேரில் காவலர்களிடம் இருவரும் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது. சுருட்டை முருகன் மீது கொள்ளை, திருட்டு என சுமார் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கைது செய்யப்பட்ட முருகனிடமிருந்து 9 இருசக்கர வாகனம், 3 செல்போன், ஹார்டு டிஸ்க் (தகவல்கள் சேமிப்பு வன்பொருள்), 256 வெளிநாட்டு டாலர்கள், 20 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசாரணைக்கு பின்னர் முருகன் மற்றும் ஆகாஷை காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் திருட்டு!