சென்னை பல்லாவரத்தை அடுத்த அண்ணா நகர் காந்தி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்தவர் நடராஜ் (53). முன்னாள் இராணுவ வீரரான இவர், தனியார் வங்கி ஒன்றில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு நடராஜின் மகள் சொர்ணா (21), யாருடனோ அலைபேசியில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். நள்ளிரவில் மகள் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த நடராஜ், அவரைக் கண்டித்துள்ளார். இதனால், சொர்ணாவின் தாய் சீமாவிற்கும் (48) தந்தை நடராஜிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நடராஜ் சொர்ணாவின் அலைபேசியை கீழே போட்டு உடைத்துள்ளார்.
இதையடுத்து, இன்று காலை வழக்கம் போல் சொர்ணா பணிக்கு சென்றுள்ளார். அவரது தாய் சீமா அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார். வீட்டில் நடராஜும் அவரது தாய் கன்னம்மாளும் (87) இருந்துள்ளனர். கடைக்கு சென்ற சீமா பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, மின்விசிறியில் நடராஜும், தாய் கன்னம்மாள் சன்னல் கம்பியிலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சீமா கதறி அழுதார்.
பின்னர் அங்கு வந்த சங்கர் நகர் காவல் துறையினர், இருவரது உடல்களையும் உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். வயதான தாயும் மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வால் அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி!