தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசலாற்றைச் சேர்ந்த சங்கர் மகன் முத்துக்குமார்(40). தச்சுத் தொழிலாளியான இவரும், இவர் தந்தையும் ஒன்றாக மது அருந்தி பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதனிடையே, இருவருக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தை, வாய் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கர், தனது மகனைக் கொலை செய்துள்ளதாக அறியப்படுகிறது.
மொட்டை மாடியிலிருந்து வந்த சத்தத்தைத் தொடர்ந்து, அருகில் இருந்தர்கள் சென்று பார்த்தபோது, முத்துக்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் நிலைய ஆய்வாளரும், காவல்துறை துணை கண்காணிப்பாளரும், முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதன்பின், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்த தந்தை சங்கரைத் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட முத்துக்குமாருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.