கொளத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் நீண்ட நாள்களாக அப்பகுதி முழுவதும் கண்காணித்துவந்தனர்.
இந்நிலையில், கொளத்தூர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேரை பிடித்துக் காவல் துறையினர் விசாரித்தனர்.
அப்போது, அவர்களது பையில் தடைசெய்யப்பட்ட 50 போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள் 300, மெத்தபெட்டமைன் 20 கிராம், கஞ்சா இரண்டரை கிலோ ஆகியவை இருப்பது கண்டு அவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
மேலும் அவர்கள் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் (20), நிஷாந்த் ரயன் (23), கொரட்டூரைச் சேர்ந்த பாலசந்தர் (22) என்பது தெரியவந்தது. இவர்கள்தான் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள்களை விற்பனை செய்துவந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இவர்கள் மூன்று பேரையும் கைதுசெய்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சிப்ஸ் வாங்கிவிட்டு காசு கொடுக்காததைத் தட்டிக் கேட்டவர் வெட்டிப் படுகொலை!