உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது மற்றொரு பட்டியலின பெண் ஒருவர் உ.பி-யில் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள கான்பூர் தேஹத் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்து அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கிராமத் தலைவர் மற்றும் இருவர் அப்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என அப்பெண்ணை மிரட்டிவிட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதுகுறித்து அப்பெண் பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் மீது காவல்துறையினர் ஐபிசி மற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியினர் சட்டம், 1989 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர். இவர்களை கைது செய்ய வட்ட அலுவலர் மற்றும் கூடுதல் எஸ்.பி. தலைமையிலான மூன்று காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஹத்ராஸ் பாலியல் சம்பவம் ஓய்வதற்கு முன்பாக தொடர்ந்து இதேபோன்ற பாலியல் சம்பவங்கள் அரங்கேறி வருவது அம்மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வளையை நசுக்கும் பாஜக - சோனியா காந்தி காட்டம்