பருவ காலம் மாறும் போது, புதிய ஊர்களுக்கு சென்று தண்ணீர் குடிக்கும் போதும், மற்ற பகுதியின் தட்ப வெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது பலருக்கும் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, குரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அதிலும், குறிப்பாக குளிர்காலம் வந்துவிட்டால் பெரும்பாலானோர் தொண்டை வலி பிரச்சனையினால் அவதிப்படுகின்றனர். இந்த மாதிரியான சூழலில் தொண்டை வலியை சமாளிக்க வீட்டில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் மசாலா பொருட்கள் உடனடி நிவாரணம் தரும். அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
மஞ்சள்: உலகம் முழுவதும் மருத்துவ குணங்களுக்காக அறியப்படும் மஞ்சள், அதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுக்கு பெயர் பெற்றது. ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் இம்யூனாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தொண்டை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் மஞ்சளில் உள்ள குர்க்குமின் எனும் வேதிப்பொருள் உதவியாக இருப்பது தெரியவந்துள்ளது. வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து தூங்க செல்வதற்கு முன் குடித்தால், காலையில் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
இஞ்சி: இஞ்சி பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இதிலுள்ள ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் (gingerol and shogaol) எனும் வேதிப்பொருட்கள், வலுவான அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் விளைவுகளைக் கொண்டுள்ளன. இஞ்சி சாறு சுவாச நோய்த்தொற்றுகளுக்கு காரணமான சில பாக்டீரியாக்களின் வளர்ச்சியை திறம்பட தடுக்கிறது என ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜி ஆய்வில் தெரியவந்துள்ளது. இஞ்சித் துண்டுகளை நன்கு தட்டி தண்ணீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்பட்ட இஞ்சி டீயைப் பருகுவது, தொண்டை எரிச்சலை குறைக்கும். மேலும், அதில் தேன் சேர்த்து குடிப்பது கூடுதல் நன்மைகளை தரும்.
கிராம்பு: கிராம்பில் உள்ள யூஜெனோல் (eugenol) பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தொண்டை வலியைக் குறைக்க உதவுகிறது மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது. பைட்டோதெரபி ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கிராம்பு எண்ணெய் வலியைக் குறைப்பதில் நல்ல நிவாரணம் தரும் என தெரிய வந்துள்ளது. தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற, இரண்டு கிராம்பை மெதுவாக மென்று சாப்பிடுங்கள் அல்லது கிராம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து நீர் பருகலாம்.
மிளகு: உணவில் சுவையை அதிகரிப்பதோடு, தொண்டை வலியை போக்க உதவும் பண்புகளை மிளகு கொண்டுள்ளது. மிளகில் உள்ள பைபரின், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. ஜர்னல் ஆஃப் ட்ரெடிஷனல் அண்ட் காம்ப்ளிமெண்டரி மெடிசின் நடத்திய ஆய்வில், மிளகு சளி ஓட்டத்தைத் தூண்டுகிறது, மற்றும் தொண்டை எரிச்சலை தடுக்க உதவுவதும் தெரிய வந்துள்ளது. வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் மிளகு தூள் கலந்து குடித்தால், தொண்டைக்கு இதமாக இருக்கும்.
இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டை, அதன் குணப்படுத்தும் பண்புகளுக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நிறைந்த இலவங்கப்பட்டை தொண்டை நோய்த்தொற்றுகளை எதிர்த்து, அசௌகரியத்தை குறைக்கும். BMC Complementary Medicine and Therapies இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சில், சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் தொண்டை புண்களை ஆற்றுவதற்கும் இலவங்கப்பட்டை பயன்படும் என தெரிய வந்துள்ளது. கொதிக்கும் நீரில் ஒரு இலவங்கப்பட்டை குச்சியைச் சேர்த்து, தேன் கலந்து குடிப்பதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: தூங்க செல்வதற்கு முன் மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் 8 நன்மைகள்? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.