சென்னை: நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றிய அமித்ஷா கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, விசிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (டிச.28) அம்பேத்கர் பெயரை ஆயிரம் முறை உச்சரிக்கும் அறப்போர் நிகழ்வு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் முகமூடி அணிந்து பங்கேற்றனர்.
அப்போது விசிகவினர், புரட்சியாளர், சாதி ஒழிப்பு போராளி, பாபா சாகேப் , பேரறிஞர், மாமனிதர், பெண்ணுரிமை காவலர் அம்பேத்கர் என ஒவ்வொரு அடை மொழியுடன் உச்சரித்தனர். மேலும், பகவான் என்று சொன்னால் மோட்சம் கிடைக்கும் என்று அமித்ஷா சொன்னார்.. அவருக்கு பதில் சொல்லும் வகையில் எங்கள் பகவான் ஞான பகவான் அம்பேத்கர் என்றும், குலதெய்வம் என்றும் முழங்கினர்.
இறங்கு முகம் தொடங்கிவிட்டது
அப்போது, மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், '' அம்பேத்கர் என்று மூச்சு விடாமல் காங்கிரஸ் கட்சியினர் சொல்கிறார்கள் என்று அமித்ஷா சொன்னார். எந்த அளவுக்கு அவர்களுக்கு இது எரிச்சலூட்டியிருக்கும். சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களை உச்சரித்து இருந்தால் அவர்களுக்கு எரிச்சல் வந்திருக்குமா? என்றைக்கு அம்பேத்கரை சீண்டினார்களோ அன்றே அவர்கள் இறங்கு முகம் தொடங்கிவிட்டது.
கொஞ்சம் அறிவு தேவைப்படும்
அம்பேத்கர் பெயரை விட, கடவுள் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று காங்கிரஸ்காரருக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். கடவுள் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மத்திற்கு புண்ணியம் கிடைத்திருக்கும் என்றார். அரசமைப்பு சட்டம் பற்றியோ, அம்பேத்கர் பற்றியோ தெரிந்தால் தானே.. அம்பேத்கரை அடைய கொஞ்சம் அறிவு தேவைப்படும். அம்பேத்கரைப் பற்றி படித்திருந்தால், அமித்ஷா வால் அப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருக்கா முடியாது.
ரசிகர்கள் மாநாடு நடத்தினால் அது ஒன்றரை மாதம் செய்தியாக இருக்கும். அவர்கள் ரசிகர் அடிப்படையில் திரண்டு வந்தவர்கள், கொள்கை அடிப்படையில் அல்ல. திரையில் பார்த்தவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆவலோடு வந்தவர்கள். நாம் நடத்திய மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இந்தியாவிலேயே அப்படி ஒரு மாநாடு நடத்திய கட்சி விசிக.
குறைத்து மதிப்பிடுகிறார்கள்
நாம் ஆட்சியை பிடிப்போம் என்று யாரும் பேசவில்லை.. யாருடன் கூட்டணி சேர போகிறார் என்று பேசுகிறார்கள். போயும் போயும் துணை முதல்வர் என்று சொல்கிறார்கள்.. ஒரு பிரதமர் என்று சொல்லி இருந்தாலும் பரவாயில்லை.. நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
அம்பேத்கர் எழுதிய புத்தகத்தில் ஒரு பத்து பக்கங்களை கூட படிக்க பிரதமராலும் முடியாது, அமித் ஷாவாலும் முடியாது. அவர்களுக்கு தகுதி கிடையாது என்று சொல்ல கடைமை பட்டுள்ளோம். இனி எந்த சக்தியாலும் புதிய இந்தியா உருவாவதை, அம்பேத்கர் கண்ட கனவு நனவாவதை தடுக்க முடியாது. சிறுத்தைகள் ஆட்சி அதிகாரத்தை ஏற்பார்கள். இது தான் அம்பேத்கர் கனவு. இந்தியாவில் அம்பேத்கர் கொள்கைகளை பற்றி பேசும் ஒரே கட்சி விசிக தான். இன்று எல்லோரும் 'ஜெய் பீம்' என்று முழங்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வரலாற்றில் இதுவரை ஆயிரம் முறை அம்பேத்கர் பெயர் சொல்லும் போராட்டத்தை நடத்தி இருக்க முடியாது. அம்பேத்கர் என்று சொல்வதில் உங்களுக்கு இருக்கும் தயக்கம் அழியட்டும்.. உங்கள் அடி வயிறு எரியட்டும்.. அதில் சனாதனம் எரிந்து சாம்பலாகட்டும்'' என திருமாவளவன் கூறினார்.