கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியில் புதிய தார் சாலைகளாக 860 கிலோமீட்டர் சாலைகள் ரூ.415 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சுமார் ரூ.30 கோடி 93 லட்சம் மதிப்பில் பல்வேறு புதிய திட்ட பணிகளையும், முடிவற்ற பணிகளையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று(டிசம்பர் 28) தொடங்க வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ல புதிய பொது விநியோக கடையை தொடங்கி வைத்து, பொங்கல் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, “ இன்று 30 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் புதிய தார் சாலைகளாக 860 கிலோமீட்டர் சாலைகள் ரூ. 415 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட சாலைகளை தார் சாலைகளாக மாற்ற கூடுதலாக ரூ. 200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, ரூ.100 கோடி ரூபாய் டெண்டர் விடவும், மீதமுள்ள ரூ.100 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் தேர்வு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கவும் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி வரலாற்றிலேயே மூன்றரை ஆண்டுகளில் நிதிகள் ஒதுக்கப்பட்டு சாலைகள் அமைத்தது இதுவே முதல் முறை. வணிகர்களின் கோரிக்கையை ஏற்று அவினாசி சாலை மேம்பாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. சாலை பணிகள், மேம்பாலம் பணிகள், பாதாள சாக்கடை பணிகள், தெரு விளக்குகள் அமைப்பது என முழுமையாக பணிகளை அரசு செய்து வருகிறோம்.
இதையும் படிங்க: "லண்டனில் இருந்து திரும்பியபின் என் பாதை தெளிவாக இருக்கின்றது"-சாட்டையடி போராட்டத்துக்குப் பின் அண்ணாமலை பேட்டி!
எதிர்க்கட்சி, சட்டமன்ற உறுப்பினர் என்று பார்க்காமல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். பாஜக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே, முதலமைச்சர் அனைத்து திட்டங்களையும் அறிவித்தது நிதியை ஒதுக்கியுள்ளார். கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். திட்ட அறிவிப்புகளாக பார்க்காமல், பணிகள் தொடர்பாக முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்" என்றார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்க்கு பதில் அளித்த அவர், “இன்று ஞாயிற்றுக்கிழமை, உங்களுக்கு வேலை இருக்கா? இல்லையா?” என பதில் அளித்து புறப்பட்டு சென்றுள்ளார்.
முன்னதாக. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கோண்டது குறிப்பிடத்தக்கது.