விருதுநகர்: செங்குளம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகேயுள்ள செங்குளம் கிராமத்தில் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான வருவாய்த் துறை அனுமதிபெற்ற பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர்.
இந்நிலையி்ல், பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மருந்துக் கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள், வேல்தாய் உள்ளிட்ட ஐந்து பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இரண்டு பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட மூவர் 80 விழுக்காடு தீக்காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர், சிவகாசி, சாத்தூர், திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு தீயை அணைத்தனர். டி. கல்லுப்பட்டி காவல் துறையினர் ஆலை உரிமையாளர் அழகர்சாமி மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடிவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் வருவாய்த் துறையினரின் உரிமம் பெற்றுக்கொண்டு மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதியைப் பெற்று தயாரிக்கக்கூடிய பேன்சி ரக பட்டாசுகளை விதிமுறையை மீறி தயாரித்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: ”தென் தமிழ்நாட்டில் மழை குறைவாகவே இருக்கும்” - வானிலை மையம் தகவல்