கன்னியாகுமரி: நாகர்கோவில் சற்குண வீதி பகுதியை சேர்ந்தவர் கோபி (50). இவர் குருந்தன்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று(டிச.28) மாலை வீட்டில் இருந்த கோபி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையின் போது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில், “என் சாவிற்கு காரணம் குருந்தன்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் மேரி குளோரி பாய் தான். கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நான் விடுப்பு முடிந்து சங்கத்திற்கு சென்றபோது என்னை தகாத வார்த்தைகளால் அனைவர் மத்தியிலும் வைத்து அசிங்கமாக பேசி விட்டார்.
இதை நான் செல்போனில் ரெக்கார்டு செய்துள்ளேன். அன்றிலிருந்து நான் மன சங்கடத்துடன் வாழ்ந்து வந்தேன். எனது மனைவியும் எனது இரு மகள்களும் என் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்கள். நான் அவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டேன்.
என் கூடப் பிறந்தவர்கள் என்னை தேவைக்கு பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விட்டார்கள். டாக்டர் விஜி அண்ணே நான் உங்களிடம் உண்மையாகவே நடந்தேன். என் பிள்ளைகளை படிக்க வையுங்கள். எனது மனைவியும் காப்பாற்றுங்கள். என்றும் உங்கள் கோபி” என எழுதப்பட்டிருந்தது.
மேலும், யார், யார் எவ்வளவு பணம் தனக்கு தரவேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். அதில், “வேலப்பன் தலைவர் தரவேண்டியது ரூ. 50,000, டென்னிசன் ரூ.2,00,000, தினேஷ் ரூ.10,000, முத்துலட்சுமி 50,000” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுமிகளைக் கடத்திய அதிமுக பிரமுகரின் மகன் கைது