மதுரையில் ஆயுதங்களோடு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வதும், கொலை போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் முன்புறம் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர்கள் ஒருவருக்கொருவர் ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இரு தரப்பை சேர்ந்த இளைஞர்களிடையே நடைபெற்ற வாக்குவாதம் முற்றி மோதலாக மாறிய நிலையில் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கின்றனர்.
அப்போது ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு இளைஞர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்து நடுரோட்டில் இளைஞர்களை ஓட ஓட விரட்டி ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பித்து செல்லும் காட்சிகளும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளன. தற்போது அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் வீடியோ காட்சிகளை ஆதரமாக வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரையில் ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள போக்குவரத்து சந்திப்பு பகுதியான கீழவாசலில் இளைஞர் ஒருவரை தலையை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே நாளில் மற்றொரு பிரதான சாலையில் இளைஞர்கள் ஆயுதங்களோடு மோதிக்கொண்ட சம்பவம் மதுரை மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.