தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளரான கார்த்திகேயன் (35), வழக்கம் போல தனது இரு சக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார். அதில் அவரது 3 வயது குழந்தையான சிவலிங்கம் ஏறி நின்று கொண்டிருந்துள்ளது.
அப்போது அவ்வழியாக எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனம், நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை உரசியதில் குழந்தை சிவலிங்கம் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்ததும் டாட்டா ஏசி ஓட்டுநர் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அடிபட்ட குழந்தையை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் பெற்றோர் மற்றும் அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டதில், விபத்தை ஏற்படுத்தியவர் பெருங்களத்தூர் அன்பு நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலம் ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்ட கிராம மக்கள்!