சென்னை - மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்விராஜ் (34). இவர் பாடியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சத்யா என்ற பெண்ணுடன் திருமணமானது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்து பெற்றுள்ளனர்.
பின்னர் பிரித்விராஜூக்கு வீட்டில் வேறொரு பெண்ணைப் பார்த்து திருமணம் முடிக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி முதல் மனைவியின் சகோதரர்களான தாமு, இளையராஜா, அவரது நண்பர்கள் சேர்ந்து அம்பத்தூரில் பணிபுரியும் இடத்திற்குச் சென்று பிரித்வி ராஜை தாக்கியுள்ளனர்.
பின்னர் மாமல்லபுரத்தில் உள்ள முதல் மனைவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, கட்டாயப்படுத்தி விவகாரத்து பெற்ற, அதே பெண்ணுடன் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். மேலும் இந்த வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது எனவும் மிரட்டி உள்ளனர்.
பின்னர் அந்த வீட்டில் இருந்து நேற்று(ஜூலை 8) தப்பித்து வந்த பிரித்வி ராஜ், தனது வீட்டில் மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர் இன்று காலை திடீரென்று உடலில் பெட்ரோலை ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார்.
இதையடுத்து, அருகிலிருந்த நபர்கள் தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிகிச்சைப் பெற்று வந்த பிரித்வி ராஜ் தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மதுரவாயல் காவல் துறையினர் தற்கொலைக்குத் தூண்டிய தாமு, இளையராஜா ஆகியோரைத் தேடி வருகின்றனர்.