சென்னை: குறைந்த விலைக்கு கைப்பேசி தருவதாகக் கூறி இணையத்தில் மோசடி செய்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பூர், ஸ்ரீவள்ளிபுரத்தில் வசிக்கும் விக்னேஷ் (25) கணினி பழுதுபார்க்கும் வேலை செய்துவருகிறார். விக்னேஷ் கைபேசி வாங்குவதற்காக செப்டம்பர் 17ஆம் தேதி ஓ.எல்.எக்ஸ் என்ற இணையதளத்தில் தேடியபோது, குரோம்பேட்டைச் சேர்ந்த அரவிந்த் (22) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அதன்பேரில் விக்னேஷ், அரவிந்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ஒரு கைப்பேசி வாங்கினால் விலை அதிகமாகும் என்றும், 10 கைப்பேசி வாங்கினால் குறைந்த விலைக்கு தருவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய விக்னேஷ் அவரது ஆக்ஸிஸ் வங்கி கணக்கிலிருந்து ஒரு லட்சத்து 95ஆயிரம் ரூபாயை (ரூ.1,95,000) அரவிந்த் கொடுத்த இகுடாஸ் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளர்.
ஆனால் இதுவரை கைப்பேசியைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால் விக்னேஷ் செப்டம்பர் 25 அன்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில் அரவிந்த், விக்னேஷிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கைப்பேசிகளைத் தராமல் மோசடி செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அரவிந்தை கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்த கைப்பேசிகளை கைப்பற்றினர்.