ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சோழம்பேடு ரோட்டை சேர்ந்தவர் பச்சையம்மாள் (72). கடந்த மாதம் 14 ஆம் தேதி இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் வீடு புகுந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், பச்சையம்மாளின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலி, கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட 5 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதில், காது, மூக்கு கிழிந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பச்சையம்மாளை, அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் காவல்துறையினர் நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து அம்மர்ம நபரை தேடி வந்தனர். இதில், மூதாட்டியை தாக்கி கொள்ளையில் ஈடுபட்டவர் திருநின்றவூர், நடுகுத்தகை, கங்கையம்மன் கோவில் தெருவைச் சார்ந்த விக்னேஷ் (20) என்பது தெரியவந்தது.
இதுநாள் வரை தலைமறைவாக இருந்த விக்னேஷை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். பின்னர், அவரிடமிருந்து 5சவரன் நகைகளை பறிமுதல் செய்த காவலர்கள், விக்னேஷை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இடுக்கியில் தோட்டத் தொழிலாளிகள் இருவர் வெட்டிக்கொலை