தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளில் இதுவரை 51 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட சிவகங்கை காவலர் சித்தாண்டி குடும்பத்தில் நான்கு பேர் முறைகேடாக குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவலர் சித்தாண்டியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தியதில் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு நடந்தது உறுதியானது.
சிபிசிஐடி விசாரணையில் குரூப் 4 தேர்வில் முக்கிய இடைத்தரகராக இருந்த ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் ஆகிய இருவரும், குரூப் 2ஏ, விஏஓ ஆகிய இரு தேர்வுகளிலும் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவரையும் 2 வழக்குகளில் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதனடிப்படையில் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் பல முக்கிய நபர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சீருடைப் பணியாளர் தேர்வு முறைகேடு - சிபிஐ விசாரணை கோரி வழக்கு!