ஹைதராபாத்: ஹரியானாவைச் சேர்ந்த இருவர் மூலம் கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த 1,010 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பேசிய ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் பகவத், “194 பெரிய பொட்டலங்களில் நிரப்பப்பட்ட 1010 கிலோ கஞ்சா, ஒரு கண்டெய்னர், ரூ.4,000 ரொக்கத்துடன் இரண்டு கைபேசிகள் கைபற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பொட்டலத்திலும் ஐந்தரை கிலோ கஞ்சா நிரப்பப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ஏறக்குறைய 30 லட்ச ரூபாய் இருக்கும்.
இது தொடர்பாக மூன்று பேர் தேடப்பட்டுவருகின்றனர். முகமது ரம்ஜான், ஹரியானாவைச் சேர்ந்த கவுதம் ராவ் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானாவைச் சேர்ந்த இம்ரான் தனது லாரியை ஒடிசாவுக்கு ஓட்டிச் சென்று அங்குள்ளவரிடம் ஒப்படைப்பார்.
பின்னர், லாரியை எடுத்துக் கொண்டு விவேக் சிங், மகாதேவ் இருக்கும் வனப்பகுதியில் கஞ்சாவை ஏற்றுவதற்காகக் கொண்டுச் செல்வார்.
இதையடுத்து. இம்ரானின் லாரி விஜயவாடா வழியாக வாரணாசிக்கு கொண்டு செல்லப்படும். இதற்கிடையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் லாரி சிக்கியது.
இப்படியாக தான், கடத்தல் சம்பவம் அரங்கேறிவந்துள்ளது” என்றார்.