திருச்சி மாவட்டம் பீமா நகரை சேர்ந்தவர், தமிமுன் அன்சாரி. இவர் உள்நாட்டு ஏற்றுமதி- இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை போத்தனூர் அஷ்ரப் மற்றும் சலீம் ஆகிய இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு கோவையில் அரிசி மண்டி நடத்தி வருவதாகவும் அரிசி மண்டிக்கு 21 டன் அரிசி வேண்டும் என்றும் இணையம் மூலம் கூறியுள்ளனர்.
இந்த உரையாடலின்போது ஜி.எஸ்.டி எண்ணையும் இணைத்து அனுப்பியுள்ளனர். இதனை நம்பிய அன்சாரி முன் பணம்கூட வாங்காமல் 9 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 21 டன் அரிசியை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், அரிசியை வாங்கிய இருவரும் பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது தொடர்பாக ஒரு முறை நேரில் சந்தித்து பணம் கேட்டதற்கு அன்சாரிக்கு அஷ்ரப் கொலை மிரட்டல்விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அன்சாரி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மோசடியில் ஈடுபட்ட அஷ்ரப், சலீம் ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த அஷ்ரப் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சலீமை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.