முங்கேலி (சத்தீஸ்கர்): 55 வயது பெண் நீதிபதியின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இச்சம்பவம் முங்கேலியில் ஞாயிற்றுக்கிழமை (நவ15) நிகழ்ந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்ட நீதிபதியாக இருப்பவர் கந்த மார்ட்டின். முங்கேலி மாவட்ட கூடுதல் நீதிபதியான இவருக்கு, கார்கி பகுதியில் அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்தக் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை (நவ14) அங்கிருந்த பணியாளர்களிடம் நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த சென்ற பணியாளர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை நீதிபதியின் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது கந்த மார்ட்டினின் அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஊழியர்கள் கதவை தட்டினார்கள். பின்னர் ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர். அப்போது, மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் நீதிபதி சடலமாக கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் உடனே காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குஜூர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகிறோம். அவரின் அறையில் தற்கொலை குறிப்புகள், கடிதங்கள் என எதுவும் கிடைக்கவில்லை.
இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் டெல்லியில் வசிக்கிறார். மற்றொருவர் ராய்ப்பூரில் வசிக்கிறார். இவரின் கணவர் கடந்தாண்டு இறந்துவிட்டார். அதிலிருந்து அவர், அதீத மன அழுத்தத்தில் இருந்துள்ளார். விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. உடற்கூறாய்வு அறிக்கைக்கு பின்னர் முழு தகவலும் தெரியவரும்” என்றார்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகர் ஆசிஃப் பஸ்ரா தூக்கிட்டுத் தற்கொலை