அயனாவரம் ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). நாவலூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது தங்கை கந்தன்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அயனாவரம் சோலை தெருவில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வரும் தஸ்தாகிர் பாஷா (30) என்பவர், சதீஷ்குமாரின் தங்கையை தினமும் பின் தொடர்ந்து வந்து, காதலிக்க சொல்லி தொந்தரவு செய்துள்ளார்.
இது குறித்து சதீஷ்குமாரிடம் அவரது தங்கை முறையிட்டதால், கடந்த 6 ஆம் தேதி தஸ்தாகீர் மீது அயனாவரம் காவல் நிலையத்தில் சதீஷ் புகாரளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தஸ்தாகிர் பாஷா, குடிபோதையில் நேற்று நள்ளிரவு சதீஷ்குமாரின் வீட்டிற்கு சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை, பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இது குறித்தும் அயனாவரம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல் துறையினர், தஸ்தாகீரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: உயிருடன் இருப்பவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!