Latest Crime News: சேலம் மாவட்டம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவர் சேலத்தில் உள்ள தீபம் பீடி என்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ஃபெட்எக்ஸ் என்ற பார்சல் நிறுவனத்திற்கு சித்திக் பெயரில் 53 சரக்கு மூட்டைகள் டெல்லியிலிருந்து வந்தது.
இதையடுத்து, சரக்கு மூட்டைகளை பார்சல் நிறுவன ஊழியர்கள் கிச்சி பாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இறக்கி வைத்து விட்டு சென்றனர். இந்த மூட்டைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் இருப்பது பார்சல் நிறுவன ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து, பார்சல் நிறுவன ஊழியர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து கிச்சிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான காவலர்கள் சரக்கு மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்குபதுக்கி வைக்கப்பட்டிருந்த 53 மூட்டைகளிலும் ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக காவல் துறையினர் சித்திக்கை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தனது பெயரில் பார்சல் ஏதும் பதிவு செய்யவில்லை என்றும் தனக்கும் பார்சலுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர்பணியாற்றும் நிறுவன உரிமையாளர் சித்திக்கின் ஆதார் அட்டையை பயன்படுத்தி பார்சலை பதிவு செய்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து காவல் துறையினர் பீடி நிறுவன உரிமையாளரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சேலம் மாநகரையொட்டிய பகுதியில் பல லட்சம் மதிப்பிலான பான்பராக், ஹான்ஸ் பிடிபட்டிருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Latest Pudukkottai News: 2,100 போதை மாத்திரைகள் பறிமுதல் - விற்பனை செய்த 6 பேர் கைது!