ஆவடி அடுத்த பருத்திப்பட்டு எம்ஜிஆர் நகரில் ஒரு வீட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஏழு தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி இவர்கள் வீட்டுக்குள் நான்கு இளைஞர்கள் புகுந்துள்ளனர். பின்னர், அவர்கள் கத்தியைக் காட்டி அவர்களிடம் இருந்து ஏழு செல்போன்களை பறித்துச் சென்றனர்.
இது குறித்து, புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, வடமாநிலத் தொழிலாளர்களிடம் செல்போனை பறித்த இளைஞர்கள் கேமராவில் சிக்கினர். விசாரணையில் இவர்கள் திருவேற்காடு சின்ன கோலடியைச் சேர்ந்த மணிகண்டன் (19), ஜெய்சதீஷ் (23), செந்தில்குமார் (19), சஞ்சய் கண்ணன் (20), அருண் (22) ஆகியோர் எனத் தெரியவந்தது.
இதில், அருணைத் தவிர மற்ற நால்வரையும் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் செல்போன்கள், வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.