திருப்பத்தூர்: தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பெரியதாமல் செருவு பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன். இவரும் இவரது மனைவி பிருந்தாவும் நேற்று (செப்.29) காலை வாணியம்பாடியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று பின் தங்கள் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிய நிலையில், இருவரும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மின்னூர் அருகே பகல் 12.15 மணியளவில் வந்துள்ளனர்.
அப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரம் குடிபோதையில் இருந்த மூவர் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை வழிமறித்து பின்னர் பிருந்தாவின் கழுத்தில் இருந்த 1 1/2 சவரன் தாலி சங்கிலியை பறித்து தப்பியோடியுள்ளனர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் தப்பியோடியவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது மூவரில் ஒருவரை மட்டும் பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
பின்னர் ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நபரை கைது செய்துள்ளனர். அதன்பின் விசாரணை மேற்கொண்டதில், அவர் மின்னூர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பது தெரியவந்தது, மேலும் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோழி திருடியதாக கூறி அண்ணனை கொலை செய்த தம்பி!