சென்னை தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் திருடன் ஒருவன் புகுந்து திருட முற்பட்டதாக மாம்பலம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் சென்றபோது, வட மாநில நபர் ஒருவர் குடியிருப்பு வாசிகளிடமிருந்து தப்ப முயல்வதற்காக அங்குள்ள வீட்டு ஜன்னல்களை அடித்து உடைப்பதைக் கண்டுள்ளனர்.
உடனே தலைமைக் காவலர் சத்யமூர்த்தி அந்த நபரை பிடிக்க முயன்ற போது, அந்த நபர் அவரின் விரலைக் கடித்து துண்டித்துவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் அந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்பு அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பல்வதூர்(40) என்பதும், இதற்கு முன் பல ஆளில்லாத வீட்டிற்குள் புகுந்து திருட்டு சம்பவங்களை நிகழ்த்தியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பல்வதூர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.