சேலம் மண்டல பத்திரப்பதிவுத் துறையின் கீழ் சேலம் கிழக்கு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் துணைத்தலைவராக மருத்துவர் ஆனந்த் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம் கடலூர் மண்டலத்துக்கு துணைத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
இந்நிலையில், சனிக்கிழமை (அக்.31) பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அன்றைய தினம் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. இதனிடையே, மாவட்ட சார் பதிவாளர் அலுவலர்களிடம் ஆனந்த் லஞ்சம் கேட்பதாக, ஊழல் ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய புகார் வந்தது.
இதன்பேரில் அழகாபுரம் கைலாச நகரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமெளலி தலைமையிலான காவல் துறையினர் நேற்றிரவு (நவ.1) சோதனை மேற்கொண்டனர்.
இதில், கணக்கில் வராத ரொக்கப் பணம் 3.20 லட்சம் ரூபாய், 34 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: கோவையில் பிரபல ஜவுளி நிறுவனங்களுக்கு அபராதம்!