சென்னை: ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
ஸ்ரீபெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு ஓட்டுனர் உரிமம், உரிமத்தை புதுப்பித்தல், புதிய வாகனங்களை பதிவு செய்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்வதற்காக காவல்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள், விபத்தில் சிக்கும் வாகனங்களை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் உடனுக்குடன் பணியை செய்து கொடுக்க இடைத்தரகர்கள் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எட்டு பேர் கொண்ட குழுவினர் இரண்டு கார்களில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று, ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். வட்டார போக்குவரத்து அலுவலரின் கார், மோட்டார் வாகன ஆய்வாளர்களின் அறைகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதோடு அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சில இடைத்தரகர்கள் வந்து சென்றதும், அவர்கள் கொடுத்திருந்த விண்ணப்பங்கள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அதிரடி சோதனை இன்று(அக்.2) அதிகாலை முடிவடைந்தது. இந்த சோதனையின்போது கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. அதனை எண்ணிப்பார்த்ததில் நான்கு லட்ச ரூபாய் இருந்தது. இந்த பணத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலரால் உரிய கணக்கு காட்ட முடியாததால் அந்த பணம் கைப்பற்றப்பட்டது.
அவற்றுடன் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட அனைத்தும் 3 துணிப்பைகளில் போட்டு காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு லஞ்ச் ஒழிப்புத்துறை எடுத்துச்சென்றனர்.
இதையும் படிங்க: 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன் கைது!