தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள செய்யாமங்கலம் குடியான தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்ற மோகன்ராஜ் (54), இவரது மகள் சத்யா. சத்யாவிற்கும் அவரது கணவர் விஜய்க்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, சத்யா குழந்தைகளுடன் தந்தையின் வீட்டில் இருந்துவந்தார்.
இந்த நிலையில், பாஸ்கரின் வீட்டிற்கு வந்த விஜய், தனது குழந்தையைக் கேட்டுள்ளார். இதனால் பாஸ்கருக்கும், விஜய்க்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது விஜய் தன் மாமனார் பாஸ்கரை அடிக்க கையை ஓங்க அதை சத்யா தடுத்துள்ளார்.
விஜையை அடிக்க பாஸ்கர் கையை ஓங்கும்போது, தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் மயக்கமடைந்த பாஸ்கரை திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி பாஸ்கர் இறந்தார்.
இது குறித்து பாஸ்கரின் மகள் சத்யா தோகூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பாஸ்கர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.