ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு தனியார் வானொலி தொலைக்காட்சியில் பெண் பத்திரிகையாளராக பணிபுரிந்தவர் மலாலா மைவாண்ட். இவர் பணி விஷயமாக நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து சரமாரியாக சுட்டனர். இதில் காரை ஒட்டிச்சென்ற ஓட்டுநர் முகமது தாகிர், மலாலா மைவாண்ட் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பலரை ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் கைது செய்துள்ளது. இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது
இந்த கொலைக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஆப்கானிஸ்தானில் இரண்டாவது பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார். நவம்பர் 12ஆம் தேதி ஹெல்மண்ட் மாகாணம் குண்டு வெடிப்பில் அலியாஸ் தயீ என்ற மற்றொரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்.