சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை வீரா குட்டி தெருவில் வசிக்கும் மதன் (48), தண்டையார்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட சுமார் 18 வழக்குகள் உள்ளன. இவ்வேளையில் ஜூலை 8ஆம் தேதி அன்று கொருக்குப்பேட்டையில் மதுபானங்களை பதுக்கிவைத்து சட்டவிரோதமாக விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் மதன் இவ்வழக்கு தொடர்பாக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பிணை கேட்டு விண்ணப்பித்தார். குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவின்பேரில், ஜூலை 13 அன்று நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டார். இச்சூழலில் நிபந்தனைப் பிணையில் வெளிவந்த மதன், ஆகஸ்ட் 15 அன்று தண்டையார்பேட்டையில் கேசவன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதன் நிபந்தனை பிணையில் இருந்து கொலை செய்ததினால், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி நடந்து கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதாலும், கொருக்குப்பேட்டை ஆய்வாளர், குற்றவாளி மதனுக்கு ஏற்கனவே தொடர்புடைய குற்ற வழக்கில் வழங்கிய பிணையை ரத்து செய்ய பரிந்துரைத்து மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, கொருக்குபேட்டை ஆய்வாளரின் மனுவை பரிசீலித்து, பிணையை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளி மதனுக்கு வழங்கிய நிபந்தனை பிணை ரத்து செய்து உத்தரவிட்டார்.