தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த நபரின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்மைக் காலமாக வழக்கின் தன்மையைப் பொறுத்து, தொடர் குற்றங்களில் ஈடுபட்ட ஒருவர் முதல்முறை வழக்கில் சிக்கினால்கூட, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பெரும் நகரங்களில் மாநகரக் காவல் ஆணையரும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரும் உத்தரவு பிறப்பிப்பார்கள்.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர்கள் மீதும் குண்டர் சட்டத்திற்கு ஈடாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. அதனடிப்படையில் தமிழ்நாடு சட்டம் 1982 சட்டப்பிரிவு 14இன் சைபர் சட்டப்படி, சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர் மீது, குண்டர் சட்டத்திற்கு ஈடாக நடவடிக்கை மேற்கொள்ள, கடந்த 2014ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, கடலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற பொறியியல் பட்டதாரி மீது, இந்தக் கடுமையான சைபர் சட்டம் முதல்முறையாக பாய்ந்துள்ளது. விக்னேஷ் மீது சென்னையைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள், மத்திய குற்றப்பிரிவில் புகார்கள் அளித்திருந்தனர்.
அந்தப் புகாரில் திரைப் பிரபலங்களின் பெயரில் போலி சமூக வலைதள கணக்கை உருவாக்கி, பெண்களிடம் பழகிய பின் அவர்களின் புகைப்படங்களை பெற்றுக்கொண்டு, ஆபாசமாக சித்தரித்ததாக புகார் அளித்திருந்தனர். மேலும், வங்கிக் கணக்கில் கேட்டத் தொகையை போடாவிட்டால் வலைதளத்தில் ஆபாசமாக பதிவேற்றிவிடுவேன் என விக்னேஷ் மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது, தமிழ்நாடு சட்டம் 1982 சட்டப்பிரிவு 14 சைபர் சட்டப்படி முதல்முறையாக வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர்கள், இந்தக் கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சைபர் குண்டர்கள் என பட்டியலிடப் படுவார்கள் என்று சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.
மேலும், இச்சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் குண்டர் சட்டத்தைப் போன்று ஒராண்டுக்கு பிணை பெற முடியாது என்றும், குண்டர் சட்டத்தைப் போன்று அறிவுரைக் கழகத்தில், சைபர் சட்டத்தை ரத்து செய்ய முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வழிப்பறி கொள்ளை: 13ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை!