டெல்லி தயால்பூர் பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், வெள்ளிக்கிழமை இரவு உறவினரின் விருந்து விழாவில் பங்கேற்ற பின், தனது குழந்தையை வீட்டருகில் விட்டுச் சென்றுள்ளார். இரவு 10 மணியளவில், குழந்தை இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று தாய் அழைத்தபோது அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக உறவினர்களுடன் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் குழந்தை கிடைக்காததால், கார்வால் நகர் காவல் நிலையம் சென்று புகாரளிக்க தயாராகினர்.
இந்நிலையில், இரவு 12 மணியளவில், குழந்தை அதே காவல் நிலையத்தில் இருப்பதாக தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் விரைந்த உறவினர்கள், அங்கும் குழந்தை இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, காவலர் ஒருவரிடமிருந்து வந்த மறு அழைப்பில், “குழந்தை உடல்நிலை சரியில்லாமல், ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் பதறிய உறவினர்கள், மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு குழந்தையின் நிலைமையைக் கண்ட உறவினர்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலை மறியல் நடத்தினர். அதன்பிறகு காவல்துறையினர் தரப்பில், “குழந்தை அடையாளம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும், சில கண்காணிப்புப் காட்சிகள் கிடைத்துள்ளன. அதை வைத்து இக்கொடூரச் செயலை அரங்கேற்றியவர் குறித்து அடையாளம் காணும் வேலையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.