புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பேக்கரி ஒன்றில் இரவு நேரத்தில் உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றார்.
இதனையடுத்து திருட்டுச் சம்பவம் தொடர்பாக பேக்கரி உரிமையாளர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது கடைக்குள் பதுங்கி வந்து சிசிடிவி கேமராவை ஆஃப் செய்துவிட்டு அடையாளம் தெரியாதநபர் திருடியது தெரியவந்தது.
வெறும் ஐந்து நொடிகளே பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை காரைக்கால் காவல் துறையினர் தொடங்கினர். அதில் திருட்டில் ஈடுபட்ட நபர் விழுப்புரத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (19) என்பதும், கடந்த சில தினங்களாக அவர் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து மேட்டுப்பாளையம் விரைந்த காரைக்கால் காவல் துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சௌந்தர்ராஜன் ஊர் ஊராகச் சென்று பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சௌந்தர்ராஜன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.