ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சைலர்ஸ் மெரிடைம் அகாடமி என்ற கல்வி நிறுவனத்தில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர், அலுவலக உதவியாளர் என பல்வேறு பதவிகள் காலியாக இருப்பதாகவும், அதன் மூலம் பிற்காலத்தில் அரசின் கடல்சார் வேலை வாய்ப்புகளையும் பெற முடியும் என குறுஞ்செய்திகள், இணைய தளங்கள் மூலம் பொய் வாக்குறுதிகளைப் பரப்பியுள்ளனர்.
கல்வி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு போல் அறிக்கை:
கடல்சார் படிப்புகள் படித்து முடித்த பட்டதாரிகளும், அலுவலக நிர்வாகப் பணிகளுக்காக பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் மோசடி கும்பலைத் தொடர்பு கொண்டுள்ளனர். இந்தக் கல்வி நிறுவனத்தில் வேலையின் அடிப்படையில் ஆறாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டும். நேர்காணலின் போது செலுத்தினால் போதும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நேர்காணல் பெயரில் நாடகம்:
விண்ணப்பித்தவர்களை நேர்காணலுக்காக விசாகப்பட்டினம் வரை வரவழைத்து, அந்த கல்வி நிறுவனத்தை வெளியில் இருந்தே காண்பித்துவிட்டு, விசாகப்பட்டினத்திலேயே ஒரு சிறிய அரங்கை வாடைகக்கு எடுத்து நேர்காணல் போன்று நடத்தி நாடகத்தை நடத்தியுள்ளனர். இந்த மோசடியில் தொடர்புடைய பெண்மணி, இந்தக் கல்வி நிறுவனமானது அமைச்சருடையது, அவரைப் பற்றி நன்கு தெரியும் எனக்கூறி வேலைக்காக பணத்தை வசூல் செய்துள்ளனர். இந்தக் கும்பல் சுமார் ரூ.30 லட்சம் வரை பணத்தை வசூலித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளது.
110 பேர் ஏமாற்றம்:
நீண்ட நாள்களாகியும் வேலைக்கான அழைப்புக் கடிதம் வராததால் சந்தேகமடைந்த, விண்ணப்பதாரர்கள், விசாரித்ததில், தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 110 பேரும் சென்னை காவல் ஆணையரிடம் வீடியோ கால் மூலம் புகராளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவினர், வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவு காவல் துறையினர் மோசடி கும்பலை வலைவீசித் தேடினர்.
திருச்சியில் சிக்கிய கும்பல்
திருச்சியில் பதுங்கியிருப்பதை அறிந்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் , துணை ஆணையர் நாகஜோதி, கூடுதல் துணை ஆணையர் சரவணக்குமார் தலைமையிலான தனிப்படை விரைந்து வந்து இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட மோகன்தாஸ், உடந்தையாக செயல்பட்ட அவரது மனைவி ராணி, கார்த்திக், மோகன்ராஜ், பார்த்திபன் என ஐந்து பேரைக் கைது செய்தனர்.
மந்திரியின் கல்வி நிறுவனம் எனக் கூறி, பணத்தை வசூல் செய்த பெண்மணி ஆந்திராவைச் சேர்ந்த மேனகா என்பது தெரியவந்தது. இவர் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் என்றெல்லாம் மோசடி செய்து வந்துள்ளார். அந்த பெண் மீது பல வழக்குகள் ஆந்திராவில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேனகா உட்பட மற்ற நபர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் சென்னை அழைத்து வந்து, விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஊரடங்கு தளர்வுகளும், கட்டுப்பாடுகளும்: அரசாணை வெளியீடு