திருவொற்றியூர் தாங்கள் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடர்மணி. மீனவரான இவர் கடந்த அக். 5ஆம் தேதியன்று இரவு வெட்டுக்காயங்களுடன் காசிமேடு கடற்கரை பகுதியில் இறந்தநிலையில் மீட்கப்பட்டார். உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்த காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்த விசாரணையில், காசிமேடு கடற்கரையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கே வந்த ஆறு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் சுடர்மணியை சரமாரியாக வெட்டி தப்பி சென்றுள்ளனர். உடனிருந்தவர்கள் அளித்த அடையாளம், தகவலின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கமல்ராஜ், புதுமனைக்குப்பம் பகுதியை சேர்ந்த பசுபதி, பவர் குப்பம் பகுதியை சேர்ந்த திலிப், சஞ்சய், தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என ஐந்து பேரை கைது செய்தனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுடர்மணியின் நண்பர் கொலைக் குற்றவாளியான எர்ணாவூர் சேர்ந்த திருப்பதி, கமல்ராஜ் உடன் சண்டை இட்டதாகவும், அதில் சுடர்மணி தலையிட்டு திருப்பதிக்கு ஆதரவாக செயல்பட்டு எங்களை தாக்கியதில் ஆத்திரத்தில் இருந்த நாங்கள் சமயம் பார்த்து கொன்றுவிட்டதாக விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும் இது குறித்து முன் விரோதம் காரணமாக இதுபோன்று கொலை சம்பவம் நடைபெற உள்ளதாக நுண்ணறிவு காவல் துறையினர் பல முறை எச்சரித்தும் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த உயிரிழப்பு நடைபெற்றுள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதேசமயம் தப்பி ஓடிய சக்திவேல் என்ற செல்வம் என்ற 17 வயது சிறுவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நிலமோசடி வழக்கு; திமுக பிரமுகர் உள்பட இருவர் கைது!