தென்காசி: சித்த வைத்தியர் வீட்டில் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த நால்வரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
சித்த வைத்தியர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, குற்றாலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான தனிப்படை மூன்று மாதங்களாக தேடிவந்தனர். இச்சூழலில், சிவகிரி அருகே வாகன சோதனையின்போது சந்தேகத்தின் அடிப்படையில் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய அண்ணா துரை என்பவர் பிடிபட்டுள்ளார்.
அவரளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திக், பாலசுப்பிரமணியன், வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்ட ராஜா ஆகியோரை குற்றாலம் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகையில் 54 கிராம் தங்க நகை, கொள்ளையடிக்க பயன்படுத்திய கத்தி, கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளை தேடி வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட மேலமெஞ்ஞானபுரம் பகுதியில், ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். சித்த வைத்தியரான இவர் தனக்குச் சொந்தமான அடுக்குமாடி வீட்டை விற்பனை செய்யவுள்ளதாக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கூறி வந்துள்ளார்.
இச்சூழலில் அவரது வீட்டை விலைக்கு வாங்குவது போல பேச்சு கொடுத்து உள்ளே நுழைந்த 6 அடையாளம் தெரியாத நபர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி, அவர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் வீட்டிலிருந்த 106 கிராம் தங்க நகை, பணத்தை கொள்ளையடித்து காரில் தப்பிச் சென்றனர்.