சென்னை : அம்பத்தூர், ராம்பூர்ணா நகர் 6ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (31). இவர் பசுமாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி காலையில் வீட்டிலிருந்து 5 பசு மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டிருக்கிறார். மாலையில், இரண்டு மாடுகள் மட்டுமே வீடு திரும்பியுள்ளன. இதைத் தொடர்ந்து, மாயமான 3 மாடுகளையும் பல இடங்களில் தேடியுள்ளார். மாடுகள் கிடைக்காததால், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, உதவி காவல் ஆய்வாளர் அனிரூதீன் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அம்பத்தூரை அடுத்த கீழ் அயனம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்த சதீஷ்(20), அதே பகுதி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த சரவணன் (27), செங்குன்றம் சென்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த கலையரசன் (35) ஆகிய மூவரும் மாடுகளை திருடியது தெரிய வந்தது.
தலைமறைவாக இருந்த மூவரையும் பிடித்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் அம்பத்தூர் பகுதி மட்டுமில்லாமல், பூந்தமல்லி, நொளம்பூர், திருவேற்காடு ஆகிய இடங்களிலும் மாடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் படி, 6 பசுமாடுகளை காவல் துறையினர் மீட்டனர். பின்பு மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : குண்டர் சட்டத்தில் இருவர் கைது!