சேலம் மாவட்டம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (25). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 15ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை அழைத்துக் கொண்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
பிரசவ வார்டில் இருந்த மருத்துவர் சிறுமியை விசாரித்த போது, அவருக்கு 15 வயது தான் ஆகிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் அதே நாளில் (நவ. 15) சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இந்தத் தகவலை அறிந்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் மருத்துவமனைக்கு வந்து, அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், ஈரோட்டிற்கு வேலைக்கு சென்ற பசுபதிக்கு 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் பலமுறை சிறுமியை ஏமாற்றிய பசுபதி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை அறிந்த அந்தச் சிறுமியின் பெற்றோர், பசுபதியை அழைத்துக் கண்டித்தனர்.
இதனால், கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சிறுமியைக் கடத்திவந்த பசுபதி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வந்து திருமணம் செய்துள்ளார். அங்கேயே சிறுமியுடன் குடும்பம் நடத்தியும் வந்துள்ளார். பின்னர் சேலம் சன்னியாசி குண்டுக்கு அழைத்து வந்து, அங்கு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். அப்போது சிறுமி கர்ப்பமாகியுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பசுபதி மீது, குழந்தை திருமணம், போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்போது, பசுபதி சிறுமியுடன் மருத்துவமனையில் இருந்து அவரைக் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் பசுபதியை உடனடியாக கைது செய்வதா? அல்லது சிறுமி டிஸ்சார்ஜ் ஆன பிறகு கைது செய்வதா? என்பது குறித்து காவல் துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, ஆபாச படம் பிடிப்பு'- இளநிலை பொறியாளரை பொறி வைத்து தூக்கிய சிபிஐ!