காஞ்சிபுரம்: மனவுளைச்சலில் சிறுவன் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து(40), இவருடைய மனைவி லட்சுமி. இவர்களின் மூத்த மகனான மாதவன் (15) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கைப்பேசியில் இணையத்தின் மூலமாக தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இதனால் அவரைக் கண்டித்த பெற்றோர், தாம்பரம் அடுத்த பீர்கன்காரனை பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்குக் கூட்டிச் சென்று சிறுவனைத் தங்கவைத்துள்ளனர். அங்கு அவர் ஒரு வார காலமாகத் தங்கி இருந்த நிலையில், விளையாட கைப்பேசி இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
இதனால் மிகுந்த மன உளச்சலில் காணப்பட்ட சிறுவன், உறவினர்கள் வெளியே சென்றிருந்த வேளையில் வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சம்பவம் அறிந்து வந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.