திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பி.எஸ். சுந்தர வீதி பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (43). திருப்பூரில் தனியார் வங்கியின் ஏடிஎம்-ல் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி பிரதீபா (34) மற்றும் 3 மகன்களுடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் சஞ்சய் (15) நாதம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவர் சஞ்சய் ஆன்லைன் வகுப்புகளில் சரியாக கவனம் செலுத்தாததால், பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். அண்மையில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனிடையே, மீண்டும் பள்ளிக்குச் சென்றால், ஆன்லைனில் கொடுத்த வீட்டுப் பாடங்களை ஒப்படைக்க வேண்டுமென்ற மன நெருக்கடிக்கு சஞ்சய் ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் சஞ்சயின் தந்தை வேலைக்குச் சென்றுள்ளார். தாயார் பிரதீபாவும் ரேசன் கடைக்குச் சென்றுள்ளார். வீடு திரும்பிய பிரதீபா வந்து பார்த்தபோது சஞ்சய் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவிநாசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது