சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு மிகவும் பரீட்சியமான நபர் இவர். அப்து ரோஸிக் எனும் இவர் தஜகிஸ்தான் நாட்டை சேர்ந்த பதினெட்டு வயதே ஆன ராப் இசைக்கலைஞர் ஆவார். கடந்த 2003ஆம் ஆண்டு பிறந்துள்ளார். சிறு வயதிலேயே ’ரிக்கெட்ஸ்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டு, போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாததால் உரிய சிகிச்சை பெறமுடியாமல் தவித்துள்ளார்.
இதுவே இவரது வளர்ச்சி தடைபட காரணமாகவும் மாறியது. இசையில் ஆர்வமுள்ள ரோஸிக்கை தஜகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பரோன் (பெஹ்ரூஸ்) என்ற 'தாஜிக் ராப்பர்', அப்து ரோஸிக்கிற்கு நிதியுதவி அளித்தது மட்டுமின்றி, அவரது திறமையை முதன்முதலில் அங்கீகரித்து இசைத் தொழிலைத் தொடர உதவியுள்ளார்.
வளர்ச்சி தடைபட்டாலும் இசையால் பெரிதும் உயர்ந்தவர். உலகின் மிகச்சிறிய பாடகர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதித்தவர் ஆவார். அவ்லொட் மீடியா எனும் தஜகிஸ்தான் யூட்யூப் சானல் மூலம் இந்த உலகிற்கு அறிமுகமான அப்து ரோஸிக், பின்னர் சமூக ஊடகங்களில் வலம் வரத் தொடங்கினார்.
தற்போது உலகம் முழுதும் அறியப்படும் பிரபலமாக வளர்ந்த அப்து ரோஸிக், தற்போது ஏ.ஆர். ரஹ்மானின் மகள் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ளார்.